சவுதாம்டன், மே 23: வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும், ஆல்ரவுண்டருமான ஆந்த்ரே ரஸல் வீசிய பந்து பட்டு, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா படுகாயமடைந்துள்ள சம்பவம் அங்கிருந்த அனைவரிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கவுள்ளதால், அனைத்து அணி வீரர்களும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளனர். நாளை முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், சவுதாம்டனில் நேற்று நடந்த அறிவிக்கப்படாத பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஃபீல்டிங்போது, அந்த அணி சார்பில் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸல் பந்துவீசினார். அவர் வீசிய பவுன்சர் பந்து எதிர்முனையில் பேட்டிங் செய்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. வலி தாங்கமுடியாத கவாஜா, ஆட்டத்தை பாதியிலேயே விட்டுவிட்டு சென்றார்.

உடனடியாக, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவாஜாவின் தாடையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், பயப்படவேண்டிய அளவுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை. விரைவில் குணமாகிவிடுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் ( ஜூன் 1-ம்) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்வது, குறிப்பிடத்தக்கது. அதற்குள் கவாஜா குணமடைந்து வர வேண்டும் என அவரது ரசிகர்கள் அங்கலாய்த்துள்ளனர்.