சாலை விபத்து: இரு வாலிபர்கள் பரிதாப பலி

சென்னை

சென்னை, மே 23: எருக்கஞ்சேரியில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், பைக்கில் பயணித்த வாலிபர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  சென்னை, வியாசர்பாடியில் இருந்து செங்குன்றம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்துள்ளது.

இதே மார்க்கத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் 6 வாலிபர்கள் பயணித்துள்ளனர். இரு பைக்குகளில் இருந்தவர்களும் பேசியபடியே அருகருகே சென்றுள்ளனர்.
நள்ளிரவு 1.30 மணியளவில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஷர்மா நகர் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, பைக்கில் பயணித்தவர்கள் லாரியை முந்திச்செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, ஒரு பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறியுள்ளது. அந்த பைக்கில் பயணித்த மூவர்களில் 2 பேர் லாரிக்கு அடியிலும், மற்றொரு சாலையின் வெளியேயும் (அப்புறத்திலும் ) விழுந்துள்ளனர். லாரிக்கு அடியில் சிக்கிய இருவர் மீது லாரியின் பின்சக்கரம் ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  உயிரிழந்தவர்கள் இருவரும் மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த சசி (வயது 18), தமீம் (வயது 19) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக, லாரி டிரைவர் சர்தார் பாய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.