புதுடெல்லி, மே 23: மக்களவைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகிறார்.
பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் 542 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் குறிப்பிட்டதைப் போல பிஜேபி கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. தொடக்கம் முதலே பிஜேபி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் வந்தது. கடைசியாக கிடைத்த தகவலின் படி பிஜேபி கூட்டணி 326 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிஜேபி மட்டும் 290-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 106 இடங்களிலும், பிற கட்சிகள் 110- இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பிஜேபி கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. டெல்லி, குஜராத், இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அனைத்துத் தொகுதிகளையும் பிஜேபி பிடிக்கும் நிலையில் உள்ளது.
ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பிஜேபி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பின்தங்கி உள்ளார். எனினும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அவர் முன்னிலையில் இருந்தார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா அதிக வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.
பீகார் மாநிலம் பட்னா சாகிப் தொகுதியில் பிஜேபி வேட்பாளராக போட்டியிட்ட ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
மோடி அரசில் இடம்பெற்றிருந்த வி.கே.சிங், ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலையில் இருந்தனர்.