வாக்கு எண்ணும்போது பழுதடைந்த சிசிடிவி

சென்னை

சென்னை, மே 23: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா திடீரென பழுதானதால், அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.  கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில், கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரசாந்த் வடநேரே கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா திடீரென்று பழுதாகியுள்ளது.  ஏற்கனவே, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எந்திரத்திலேயே முறைகேடு நடந்து வருவதால் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போதே சிசிடிவி கேமரா பழுதடைந்த சம்பவம் அங்கு பதற்ற நிலையை அதிகரித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரையில், வாக்கு எண்ணிக்கையில் அதிக சுற்றுகள் கொண்ட ஐந்து தொகுதிகளில் ஒன்றாக கன்னியாகுமரியும் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
வாக்கு எண்ணிக்கைகக்காக கன்னியாகுமரி குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கு 12 மேஜைகளும், பத்மநாபபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளுக்கு தலா 10 மேஜைகளும் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றில் 64 வாக்குப்பதிவு எந்திரம் வீதம், 28 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.