புதுடெல்லி, மே 24: மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடி வரும் 30-ந் தேதி அன்று இரண்டாவது முறையாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஷ்ய, அமெரிக்க, சீன அதிபர்கள் உள்பட பல உலக நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபி மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி வாகை சூடி வரலாறு படைத்துள்ளது.

நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இன்று அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி மத்திய அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
வரும் 26-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மோடி பேசுகிறார். இதனைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார்.
வரும் ஞாயிற்றுக்கிழமையே (26-ந்தேதி) மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு வசதியாக வரும் 30-ந் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமர் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

சார்க் நாடுகளின் தலைவர்களும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிரதமர் அலுவலகம் முடிவு செய்த பிறகு அழைப்பாளர்கள் பட்டியல் இறுதி முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
தங்களைப் போன்ற தலைவர்கள் கட்சியை வளர்ப்பதிலும், புதிய கொள்கைகளை மக்களுக்கு அளிப்பதிலும் ஆற்றிய பணி தான் இத்தகைய வெற்றிக்கு காரணம் என்று மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.

பின்னர் பிஜேபியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
முரளி மனோகர் ஜோஷி ஈடு இணையற்ற கல்வியாளர். அவர் நமது நாட்டின் கல்வியை மேம்படுத்துவதில் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை.
பிஜேபியை வலுப்படுத்துவதில் அவர் அரும் பாடு பட்டார். என்னைப் போன்றவர்களுக்கு உத்வேகமாக இருந்தார் என்று ஜோஷி பற்றி மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வாரணாசி:
தான் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதிக்கு பிரதமர் வரும் 28-ந் தேதி செல்கிறார். தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.