இன்று பிஜேபியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம்: மோடி மீண்டும் பிரதமராக தேர்வு

TOP-1 அரசியல் இந்தியா

புதுடெல்லி, மே 25: பிஜேபியின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிஜேபி அதிக இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்பது மற்றும் பிரதமரை தேர்வு செய்வது ஆகியவற்றுக்காக பிஜேபி எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நரேந்திர மோடி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும் இந்த கூட்டத்தில் முறைப்படி நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மேலும் புதிய அரசில் பங்கேற்கும் மந்திரிகள் யார் யார் என்பதை குறித்தும் பிஜேபி மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். புதிய மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகிய மூத்த தலைவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் அவர்களுக்கு மந்திரிசபையில் இடம் கொடுக்கப்படுமா என்பது குறித்தும் கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ரவிசங்கர் பிரசாத், நரேந்திர சிங் தோமர்
உள்ளிட்டோருக்கு மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் முக்கிய பதவி புதிய அரசில் அளிக்கப்படும் என தெரிகிறது. அதே சமயம் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிரிதி இரானிக்கு மந்திரிசபையில் முக்கிய இலாகா அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

கூட்டணி கட்சிகளான சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்ற பிஜேபி புதுமுகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது 16-வது நாடாளுமன்றத்தை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மந்திரிகளிடம் பதவி விலகல் கடிதமும் பெறப்பட்டது.

அதை தொடர்ந்து நாடாளுமன்ற கலைப்பு தீர்மானம் மற்றும் மந்திரிகளின் ராஜினாமா கடிதத்துடன் ஜனாதிபதி மாளிகைக்கு மந்திரிகளுடன் சென்ற மோடி, அங்கு ராம்நாத் கோவிந்தை சந்தித்து தீர்மானத்தையும், ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக்கொண்டார். பின்னர் மோடி மற்றும் மந்திரிகளுக்கு ஜனாதிபதி இரவு விருந்து அளித்தார்.

17-வது மக்களவையை ஜூன் 3-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தேர்தல் கமிஷனர்கள் முறைப்படி ஜனாதிபதியை சந்தித்து புதிய எம்.பி.க்களின் பட்டியலை அளித்தவுடன் புதிய அரசு அமைவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.