சென்னை, மே 25: தமிழகத்தில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு புதிய உறுப்பினர்கள் ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரேயன் அதிமுக, கனிமொழி (திமுக), உள்ளிட்ட 6 பேர் பதவிக்காலம் ஜூலை இறுதியில் முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

தற்போது 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுக்கு 9 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும் கிடைத்துள்ளன.  இதன் மூலம் அதிமுக மற்றும் திமுகவின் பலம் அதிகரித்துள்ளது. இரு கட்சிகளும் தலா 3 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாட்டின் போது கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக, திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.