லண்டன், மே 25: உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள எந்த வீரர் மீதும் சூதாட்ட சந்தேகம் இல்லை என ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரி அலெக்ஸ் மார்ஷல் தெரிவித் துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘கடந்த 18 மாதங்களில் கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் முறைகேடு தொடர்பாக நாங்கள் 14-15 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறோம். இவர்கள் எல்லாம் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், அனலிஸ்ட் மற்றும் முன்னாள் வீரர்கள் ஆவர்.

தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ள 10 அணிகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் மீது எந்த விதமான சூதாட்ட சந்தேகமும் இல்லை. அதுமட்டுமின்றி சூதாட்ட தரகர்கள் வீரர்களை நெருங்க முடியாத அளவுக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம்.  அதனால் சர்ச்சை இல்லாத உலக கோப்பை போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார். இந்த உலக கோப்பை தொடரில், ஒவ்வொரு அணியினருடன் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரி உடன் செல்ல இருக்கிறார்.