லண்டன், மே 25: லண்டனில் நடைபெற உள்ள இன்றைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வென்று தனது வெற்றிக் கணக்கை இந்தியா துவக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ந் தேதி துவங்க உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்கும் பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அதன் படி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. அனைத்து அணிகளும் பிற அணிகளுடன் ஒரு முறை மோத உள்ளன. முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்த ரவுண்ட் ராபின் சுற்றில் சவுதம்டன் நகரில் ஜூன் 5-ந் தேதி இந்தியா முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை எதிர்த்து ஆடுகிறது.

லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்திய அணியில் இடம் பெற யார் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க வீரர்களுக்கு இந்த பயிற்சி ஆட்டம் ஒரு வாய்ப்பாக அமையும். பயிற்சி ஆட்டம் என்பதால் அணியின் 15 வீரர்களும் மாறி, மாறி களத்தில் இறங்க முடியும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.