சென்னை, மே 26: கட்சி நலனைவிட மகன்களின் நலனிலேயே அதிக அக்கறை காட்டினார்கள் என்று ப.சிதம்பரம், கமல்நாத். அசோக் கெய்லாட் ஆகியோரை ராகுல்காந்தி கடுமையாக குறை கூறினார். மக்களவை தேர்தல் தோல்வி குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற காங். செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்ததை செயற்குழு நிராகரித்தது.

கட்சியை முற்றிலும் மாற்றி அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ராகுல் பேசிய போது, மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். மூத்த தலைவர்களை குறிப்பாக, கமல்நாத், ப.சிதம்பரம், அசோக் கெய்லாட் போன்றவர்களை தங்களது மகன்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் கட்சி நலனைவிட அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் இதில் எனக்கு விருப்பம் இல்லை.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் படுதோல்வி அடைந்து இருப்பது இதுவும் ஒரு காரணம் என்று குற்றம் சாட்டினார். கட்சி தலைவர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன் எதற்காக நாங்கள் மட்டுமே தலைமை பதவி வகிக்க வேண்டும் என்று கூறினார். அவரது இந்த பேச்சை மூத்த தலைவர்களை நிராகரித்து விட்டார்கள்.

குறிப்பாக ப.சிதம்பரம் பேசிய போது ராகுல் ராஜினாமா செய்தால் தென் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் உயிர் துறப்பார்கள் என்றார். முன்னதாக பேசிய ஜோதி ஆதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த உள்ளூர் தலைவர்கள் பலமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றார். பிரியங்கா பேசிய போது, ராகுல் ராஜினாமா செய்தால் பிஜேபி வலையில் விழுந்து விடுவார் என்றார்.

காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பேசுகையில், பிஜேபி, ஆர்எஸ்எஸ்-யை எதிர்த்து ராகுல் கடுமையாக பேரிடுவதால் அவர் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என அந்த தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் இணங்கி விடக்கூடாது என்றார்.