காஞ்சிபுரம், மே 26: பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்தும், ஆம்லேட் சாப்பிட்டு விட்டு தப்பிய கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வெண்பாக்கம் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் கடந்த 23 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே அவரது வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 25 சவரன் நகை, வைர மோதிரம் மற்றும் எல்.இ.டி டீவியையும் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதனுடைய ஹார்டு டிஸ்க்யும் திருடிய கொள்ளையர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருட்களை எடுத்து சாப்பிட்டதுடன் முட்டைகளையும் ஆம்லேட் போட்டு சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்த பொருட்களுடன் தப்பி சென்று விட்டனர்.

ஊரில் இருந்து திரும்பிய வாசுதேவன் இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கைரேகைகளை சேகரித்துடன் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.