சென்னை, மே 26: தேனி தொகுதியில் தனது தோல்வி உருவாக்கப்பட்டது என்றும், இதை எதிர்த்து விரைவில் வழக்கு போடுவேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். தேனி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் சுமார் 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:- தேனி தொகுதியில் எனக்கு வாக்களித்த நாலரை லட்சம் பேருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், அதிகார பலத்தை எதிர்த்து எனக்கு இவ்வளவு பேர் வாக்களித்து இருக்கிறார்கள். தேனி தொகுதியில் பணம் மழையாக பொழிய வில்லை. சுனாமியாக பாய்ந்து இருக்கிறது.

தேர்தல் ஆணையம் செய்த தில்லு முல்லுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. மேலும் ஆதாரங்களை விரைவில் சேகரித்து தேனியில் அதிமுகவின் வெற்றியை எதிர்த்து வழக்கு போடுவேன்.

மேலும் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் கோரிக்கை விடுப்பேன். வாரணாசியில் பிரதமர் மோடியை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்ததே அவரது மகனின் வெற்றிக்கு காரணம். தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா ஆகியோர் மீது இல்லாத அக்கறை மோடிக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

வட மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றதற்கு என்ன காரணம் என கேட்ட போது தமிழகத்தை போல் அங்கே கூட்டணி அமையவில்லை. ராகுல் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்க வேண்டும். எதிர் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததால் தோல்வி ஏற்பட்டு இருக்கிறது என்றார்.