துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மீண்டும் தங்கம் வென்ற அபூர்வி சந்தேலா

உலகம் விளையாட்டு

முனிச், மே 27: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா சாதனை படைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றதுடன் உலக சாதனையையும் அபூர்வி சந்தேலா.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவிலும் தங்கம் வென்று இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தொடர் சாதனை படைத்துள்ளார்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவரான அபூர்வி, நேற்று நடைபெற்ற போட்டியில் 251 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். சீன வீராங்கனை வாங் லுயாவ் 250.8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு சீன வீராங்கனை ஜூ ஹாங் 229.4 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இதே பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், 0.1 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்து 4-வது இடத்தையும், அஞ்சும் முட்கில் 11-வது இடத்தையும் பிடித்தனர்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு உலகக் கோப்பை போட்டியில் அபூர்வி வென்ற 4-வது பதக்கமாக இது அமைந்துள்ளது. கடந்த 2015-ல் இதே முனிச் நகரில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெள்ளி வென்றார். அதே ஆண்டு தென்கொரியாவின் சங்வான் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது,