சென்னை, மே.27: போலீசுக்கு பயந்து ரூ.1.56 கோடியை ரோட்டில் வீசிவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று இரவு சப் இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில் தலைமை காவலர் சக்திவேல், ஊர் காவல் படை காவலர் அண்ணாசாமி ஆகியோர் ஜிப்ஸி வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோட்டூர்புரம் வரதாபுரம் ஏரிக்கரை அருகே நள்ளிரவு 2.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பினார். 1 கிலோமீட்டர் தூரம் போலீசார் துரத்தி சென்றனர்.

அப்போது அந்த வாகனத்தை ஓட்டி வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த பையை நடு ரோட்டில் வீசிவிட்டு அங்கிருந்து இரு சக்கரவாகனத்தில் தப்பிவிட்டார். போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தன. எண்ணி பார்த்தபோது அதில் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கை பற்றிய போலீசார், அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் போலீசாரை கண்டதும் அந்த நபர் ரூபாய் நோட்டு கட்டுகளை பையுடன் ரோட்டில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ரோட்டில் பணத்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் கோட்டூர்புரம் போலீசார், அந்த பகுதயில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.