சென்னை,மே 27: சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர் நாளை மறுநாள் 27-ம் தேதி பதவியேற்க உள்ளனர். சபாநாயகர் தனபால் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதே போன்று 13 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி திமுக எம்எல்ஏக்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.

17-வது மக்களவை தேர்தலுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மினி சட்டமன்ற தேர்தலாக பார்க்க இந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க 7 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில், நடந்து முடிந்த மக்களவை மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டது. 22 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதிமுக-வினர் வெற்றிபெற்றனர். இதேபோல, பரமக்குடி, சாத்தூர், விளாத்திகுளம், சூலூர் ஆகிய தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இதன் மூலம் சட்டசபையில் அதிமுகவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது. பெருபான்மைக்கு 118 தேவை என்ற நிலையில் தற்போது அதிமுக வசம் 123 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே நேரத்தில் டிடிவிதினகரன் அணி சென்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்கள் நாளை மறுநாள் 29-ம் தேதி பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் இபிஎஸ்., துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து பேரவையில் திமுகவுக்கு எண்ணிக்கை 101 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28-ஆம் தேதி பதவியேற்கின்றனர். தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 13 பேரும் பதவியேற்கின்றனர்.

இவ்வாறு திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி தொகுதி போட்டியிட்டு வெற்றி பெற்ற வசந்தகுமார், தற்போது நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்றுள்ள அவர், தனது எம்எல்ஏ பதவியை 15 நாட்களுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி, அதன்படி எம்பி பதவியை வைத்து கொண்டு எம்எல்ஏ பதவியை ஒரிரு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளதாக வசந்த்குமார் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இன்னும் 6 மாத காலத்திற்குள் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.