திருச்சி, மே 27: விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மாற்று விமானத்தில் 162 பயணிகள் 9 மணி நேரம் தாமதமாக சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் தினமும் மாலை 3 மணிக்கு திருச்சிக்கு வந்து பின்னர் மீண்டும் மாலை 6.15 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் திருச்சி வந்த அந்த விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல 173 பயணிகள் காத்து இருந்தனர். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானத்தை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.

அந்த விமானம் 4 மணி அளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு 162 பயணிகளும் சிங்கப்பூருக்கு 9 மணிநேரம் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 11 பயணிகள் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி சென்றனர்.