சென்னை, மே 27: தமிழகத்தின் நலன் கருதி கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய நீர்வளத்துறை அமைச்சர் என்ற முறையில் தாம் மேற்கொள்ள விருக்கும் பணிகள் குறித்து டுவிட்டர் பதிவில் விளக்கியுள்ள நிதின் கட்கரி, எனது முதல் பணி கோதாவரி ஆற்றை கிருஷ்ணா ஆற்றுடன் இணைப்பது, கிருஷ்ணா ஆற்றை காவிரியுடன் இணைப்பது, அதன்மூலம் கோதாவரி ஆற்றில் வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழ்நாட்டின் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்வது தான்’’ என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தின் மீதான அமைச்சரின் இந்த அக்கறை பாராட்டத்தக்கது. தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தருவதற்காக கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவிருப்பது தனிப்பட்ட முறையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவதற்கு பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமான கோரிக்கை ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு முன்வந்திருப்பது தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மை ஆகும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.