புதுடெல்லி,மே 28: காவிரியில் அடுத்த மாதத்திற்கு தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. மே மாதத்தில் வந்து சேர வேண்டிய தண்ணீரில் 2 டிஎம்சியை உடனடியாக திறந்து விட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

மேலும் மேகதாது அணை விவகாரத்தை இந்த கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்றும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், மேகதாது விவகாரம் குறித்த நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும். இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதப்பொருளாக சேர்க்கப்பட்டத்திற்கு தமிழக கடும¢ எதிர்ப்பு தெரிவித்தது.

மேகதாது அணை விவகாரம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இனி வரும் காலங்களில் நடைபெறும் கூட்டங்களில் மேகதாது அணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தமிழகம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. மேலும், மே மாதத்துக்குள் 2 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் எனவும், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 9.2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு விடுவிக்க ஆணையிட வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.