சென்னை, மே 28:  மக்களவை தேர்தலில் பிஜேபி அடைந்துள்ள வெற்றி மோடி என்ற ஒரு தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தேர்தல தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக கூடாது என்று கூறியுள்ள அவர், மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை வரவேற்றுள்ள அவர், எதிர்ப்பு திட்டங்களால் தமிழகத்தில் பிஜேபி தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் பிஜேபி அடைந்த மாபெரும் வெற்றிக்கு மோடி என்ற ஒரு தனி மனிதன் தான் காரணம். தேர்தலில் வெற்றி பெற ஒரு தலைவன் தேவை. அந்தவகையில் மோடி மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக உள்ளார்.

எனக்கு தெரிந்து தேசிய அளவில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் ஆகியோர் மக்கள் தலைவர்களாக இருந்தனர். தமிழகத்தில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்தவரிசையில் மக்களை ஈர்க்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.
தேர்தல் தோல்விக்காக ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது. ஜனநாயகத்தில் ஆளும் கட்சி எவ்வளவு முக்கியமோ எதிர்க்கட்சியும் அவ்வளவு முக்கியம். இந்த தேர்தலில் இளைஞரான ராகுல் காந்தி மிகக்கடுமையாக உழைத்தார். ஆனால் அவருக்கு மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இதை கண்டு அவர் மனம் தளரக்கூடாது. வருங்காலத்தில் அவரால் சாதிக்க முடியும். தமிழகத்தில் பிஜேபி கூட்டணி தோல்வி அடைந்திருந்தாலும் தண்ணீருக்கு தவிக்கும் தமிழகத்திற்கு நிவாரணம் கிடைக்க கோதாவரி-காவிரி திட்டத்தை அறிவித்த நிதின் கட்கரிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நதிகள் இணைப்பு என்பது முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய திட்டமாகும்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததற்கு மோடி எதிர்ப்பு அலைதான¢காரணம். வடமாநிலங்களில் மோடி ஆதரவு அலை இருந்தது போல இங்கு எதிர்ப்பு அலை அடித்திருக்கிறது. நீட் உள்ளிட்ட பிரச்சனைகளாலும், எதிர்க்கட்சிகளின் வலுவான பிரச்சாரத்தாலும் இங்கு தோல்வி ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே ஒரு அலை அடிக்கும்¢போது அலையோடு செல்பவர்கள் தான் வெல்ல முடியும். அதுதான் இங்கு நடந்திருக்கிறது.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்துள்ளது. நான் நிச்சயமாக கலந்து கொள்கிறேன். பதவியேற்பு விழாவில் வாழ்த்து தெரிவிக்கலாமே தவிர மற்ற விஷயங்கள் பற்றி பேச வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்,