சென்னை, மே 28:  சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவையில் காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18, மே 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டது. இதில் 13 சட்டசபை தொகுதிகளை திமுக கைப்பற்றி, 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது.

சட்டசபையில் திமுக சார்பில் ஏற்கனவே 88 எம்எல்ஏக்களஅ இருக்கும் நிலையில், தற்போது 13 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளதால் திமுக பலம் 101 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் -8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் திமுக கூட்டணியின் பலம் 110 ஆக உள்ளது. இதில் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால், அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

இதனால் திமுக கூட்டணி பலம் 109 ஆக குறையும்.இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும், இன்று காலை 11 மணியளவில் தலைமை செயலகம் வருகை தந்தனர். அங்கு சபாநாயகர் அறையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை சபாநாயகரிடம் அளித்த பின்னர் எம்எல்ஏவாக பதவி பிரமாணம் சபாநாயகர் தனபால் செய்து வைத்தார்.

இதன் பின்னர் 13 திமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்று கொண்ட பின்னர், தலைமை செயலகத்தில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின்: சட்டசபையில் திமுக செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். சட்டசபை கூடும் போது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருவது குறித்து அப்போது முடிவு எடுப்போம். தீர்மானம் கொண்டு வருவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள். என்றார்.

முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் இடைத்தேர்தலில் வெற்றி 13 திமுக எம்எல்ஏக்களும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் தலைமை செயலகம் வருகை தந்தனர்.