சென்னை, மே 28: நடிகை திரிஷா மீண்டும் காதல் வயப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விரைவில் தனது திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம் ஆகியோருடன் நடித்துள்ள திரிஷா தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். முதலில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியுடன் காதல் வயப்பட்ட திரிஷா பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார். அதனை தொடர்ந்து பெற்றோர் பார்த்து முடிவு செய்த தொழிலதிபர் வருண் மணியனுடன் திருமணம் செய்ய இருந்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர்.அதன்பின்னர் திருமணம் பற்றி வாய்திறக்காத திரிஷா தற்போது ரசிகர்கள் கேட்ட கேள்வியின் போது வாய் திறந்து பதிலளித்துள்ளார்.

டுவிட்டரில் ரசிகர் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த திரிஷா. நான் தனியாக இருக்கிறேன். இருப்பினும் காதல் இல்லை என சொல்ல முடியாது என்று கூறினார். உங்கள் திருமணம் எப்போது என்று மற்றொரு ரசிகர் கேட்டதற்கு பதிலளித்த அவர், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என பதிலளித்தார்.  இதன் மூலம் நடிகை திரிஷா மீண்டும் காதலில் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.