சென்னை, மே 28: முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாளை ரஜினி மும்பை புறப்பட்டு செல்கிறார்.
பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 8-ம் தேதி மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இது தவிர இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த படத்தில் 2 கெட்டப்புகளில் நடிப்பது உறுயாகி உள்ளது. ரஜினியின் மகளாக நிவேத்தா தாமஸ் நடிக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மே மாதம் முதல் வாரத்தில் ரஜினி சென்னை திரும்பினார். சில நாட்கள் இங்கு ஓய்வெடுத்த ரஜினி மீண்டும் 2-வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறார். நாளை முதல் மும்பையில் 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக நாளை பகல் 12.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து மும்பை புறப்பட்டு செல்ல உள்ளார்.

இதனிடையே டெல்லியில் நடைபெறும் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுளள்து. 30-ம் தேதி நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். மும்பையில் இருந்து அன்றைய தினம் டெல்லி சென்று பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.