லண்டன், மே 29:  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி ஜூன் 14-ம் தேதிவரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ளது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 10 நாடுகளை சேர்ந்த வீரர்கள் (அணிகள்) பங்கேற்கின்றன. நாளை லண்டனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும் நடப்பாண்டிற்கான உலகக்கோப்பை தொடரில் பங்குபெறும் 10 அணிகளும், மற்ற அணியை ஒருமுறை சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 2 போட்டிகள் அல்லது ஒரு போட்டி வீதம் ஜூலை 6-ம் தேதி வரை மொத்தம் 45 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதனடிப்படையில், பட்டியலில் முதல் மற்றும் 4-வது இடம் பிடிக்கும் அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறும், இதனைத் தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் 2 மற்றும் 3-வது இடத்தில் இருக்கும் அணிகள் சந்திக்கும்.

இவ்விரு அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெறும் அணிகள் ஜூலை 14-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் நேரடியாக பங்கேற்று, இதில் வெற்றி பெறும் அணிக்கு அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை வழங்கப்படும்.