சென்னை, மே 29: தமிழக அரசு செயல்படுத்தி வரும் மாதவிடாய் கால சுகாதாரத் திட்டத்தின் கீழ் 2.35 கோடி பெண்கள் பயனடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி, சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி முறையில் நாப்கின் வழங்கும் சாதனங்களையும், அப்புறப்படுத்தும் சாதனங்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் கீழ் பள்ளி மாணவிகளுக்கும், கிராமப்புறங்களில் உள்ள வளரிளம் பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்காக ஆண்டுதோறும், ஏறத்தாழ 6 கோடி நாப்கின்கள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. சிறைகளில் உள்ள பெண் கைதிகள், மன நலக் காப்பகத்தில் உள்ள பெண்களுக்கும் அவை வழங்கப் படுகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.60.58 கோடி அதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் 2.35 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் பேணுவது மிக அவசியம். அதைக் கருத்தில் கொண்டே இதுபோன்ற திட்டங்களை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு மேம்பட வேண்டும்.

ஒருமுறை பயன்படுத்திய நாப்கினை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உபயோகப்படுத்திய நாப்கினை திறந்த வெளிகளிலோ, கழிப்பறையிலோ வீசிவிடாமல் காகிதத்தில் சுற்றி குப்பையுடன் சேர்த்து அப்புறப்படுத்த வேண்டும் அல்லது எரியூட்டும் கலன் மூலமாக அப்புறப்படுத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் நிர்மலா, முன்னாள் மாநில திட்ட குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர், மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், சமூக நலத்துறை ஆணையர் வி. அமுதவள்ளி, அமைச்சர் டாக்டர் சி.சரோஜா. சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.