சென்னை, மே 29:  தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு தீர்வு காண அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தத்தன் காரணமாக தமிழகம் முழுவதும் நீர்வரத்து இல்லாமல் அணைகள் நீர் இருப்பு என்பதன் சரிந்து காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நாள் தோறும் குழாய் மூலம் வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு, 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும், மக்களின் தேவையை 100 சதவீதம் நிறைவேற்றுவதில் அரசு பெரும் சாவாலாக உள்ளது.

சென்னையை பொறுத்தவரை சோழவரம், புழல், செம்பரபாக்கம் போன்ற நீர் வழங்கும் ஏரிகள் அனைத்து வறண்டு மைதானம் போல் காட்சி அளிக்கின்றன. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வீராணம் ஏரியில் இருந்து தற்போது நீர் திறக்கப்பட்டு, சென்னையின் ஒரு பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம், கல்குவாரி, ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் பெற்றப்பட்டு சென்னை நகரின் குடிநீர் தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் வீதிகளில் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளதால், மக்களின் குடிநீர் தேவையை அரசு தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், நிதித்துறை செயலாளர் சண்முகம், வருவாய் பேரிடர் ஆணையர் சத்யகோபால், சென்னை குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தட்டுப்பாடுன்றி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்து வரும் நிலையில், கூடுதல் லாரிகள் இயக்கவும், ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளவும். குடிநீர் தேவைக்காக கூடுதல் நிதி ஒதுக்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தட்டுபாடின்றி தண்ணீர் கிடைக்க அதிகாரிகள், அமைச்சர்கள் இணைந்து பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் எனவும் முதல்வர் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.