சென்னை, மே 29: சென்னை புதுப்பேட்டையில் உள்ள பைக் உதிரிபாகங்கள் குடோனில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  புதுப்பேட்டை வெங்கடேசன் நாயக்கர் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் ஜாகீர் என்பவருக்கு சொந்தமான பைக் உதிரிபாகங்களின் குடோன் அமைந்துள்ளது.

இந்த நிலையில், பூட்டியிருந்த குடோனில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்து ஜாகீர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவலறிந்து, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளன.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடிய தீயணைப்புவீரர்கள், அக்கம்பக்கத்து வீடுகளில் தீப்பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், எழும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.  இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.