சென்னை, மே 29: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இடங்களில் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு:- குடிநீருக்காக தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை மறியல்களும், போராட்டங்களும், குடிநீர் பஞ்சத்தின் கொடுமையில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

எனவே, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிட அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும்.

குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளை, அதிகாரிகளுடன் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் உடனே ஆய்வு செய்ய வேண்டும். திமுக எம்.பி.க்கள் உதவி: குடிநீர் இன்றி அவதிப்படும் மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கு நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் ஆங்காங்கே தங்களால் இயன்றவரை டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கிட முன் வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.