சிதம்பரம்மே. 29 : சிதம்பரம் அருகே காட்டு மன்னார்கோவில் பகுதியில் குடி நீர் கிடைக்காத காரணத்தால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  சிதம்பரம் அருகே ராதாநல்லுர் கிராமத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக குடி நீர் பிரச்சனை இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மோட்டார் பழுதடைந்ததை தொடர்ந்து புதிய மோட்டார் போடப்படவில்லை.

மேலும் இப்பகுதியில் தண்ணீர் உவர்ப்பாக மாறியதால் புதிய மோட்டார் அமைக்க ஒன்றிய நிர்வாகம் அலட்சியம் காட்டி வந்தது.  இதனால் இப்பகுதி மக்கள் குடி நீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களுக்கு சென்று குடி நீர் கொண்டு வரும் அவலம் தொடர்ந்து வந்தது.  பல்வேறு கோரிக்கைகளையடுத்து கொள்ளிடம் கூட்டு குடி நீர் திட்டத்தில் செல்லும் குடி நீர் கிராமத்திற்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புத்தூர், ஆட்கொண்டநத்தம் கிராமத்திற்கு இடையே இந்த கிராமத்திற்கு செல்லும் குடி நீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.  இதனால் கடந்த 5 நாட்களாக இப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வந்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள் உடைந்த பைப் லைன் சரி செய்யவேண்டும் என்று கோரி தொடர்ந்து ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரைகண்டுகொள்ளாமலும் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால்தினமம்தண்ணீர் இன்றி தவித்து வரும் மக்கள் ஆத்திரமடைந்து நேற்று காலை காலி குடங்களுடன் சிதம்பரம் – நெடுஞ்சேரி வழியாக காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் ராதாநல்லூ பஸ் நிறுத்தம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்த புத்தூர் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும்இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பேசினர்.

அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் உடனடியாக பைப் லைன் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.