சென்னை, மே 29: மெரினா கடற்கரை சாலையில் ரேஸ் (பைக் பந்தயம்) சென்ற 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 11 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  சென்னை, காமராஜர் சாலை களங்கரை விளக்கம் அருகே மெரினா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, நள்ளிரவு 12.30 மணியளவில் அவ்வழியாக ரேஸ் சென்ற பைக்குகளை மறித்து நிறுத்தினர்.  போலீசாரை கண்டதும் நிற்காமல் மின்னல்வேகத்தில் பறந்த சில பைக்குகளையும் போலீசார் பின்தொடர்ந்து சென்று மடக்கிபிடித்தனர். அதன்படி, மொத்தம் 11 ரேஸ் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பிடிப்பட்ட 15 பேரையும், காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்திவருகின்றனர். ரேஸ் சென்ற அனைவரும் 19 முதல் 20 வயதுடைய வாலிபர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.  மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை தொடங்கி அடையாறு பாலம் வரை இலக்கு தூரமாக நிர்ணயிக்கப்பட்டு ரேஸ் சென்றதாக அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிடிப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கு காவல் நிலையம் வரும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.