சென்னை, மே 29: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்றுடன் விடைப்பெற்று கொள்கிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தொடரும் என்று ஆய்வு மையங்கள் ஒருபுறம் கணித்துவந்தாலும், மறுபுறம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலான மழை பெய்தது. குறிப்பாக, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்தது.

இந்த நிலையில், தமிழத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் ஒரு சிறந்த மழை தினமாக அமைந்திருந்தது. கோவையில் பரவலாக நல்ல மழை பதிவானது. தர்மபுரி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

இன்றும் கூட கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கூடுதலாக நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தேனி, கன்னியாகுமரி, விருதுநகர், கரூர் மாவட்டங்களுக்கும் இன்று மழைக்கான வாயப்பு உள்ளது. இந்த மழையானது பரவலாக அல்லாமல் ஆங்காங்கே பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேசமயம், சென்னைக்கான மழை வாய்ப்பு பற்றி யாரும் கேட்க வேண்டாம். உங்களுக்கே பதில் தெரிந்திருக்கும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.