மோடி பதவி ஏற்பு விழா: பாதுகாப்பு வளையத்தில் டெல்லி

TOP-1 இந்தியா

புதுடெல்லி, மே 30: நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு இன்றிரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ள நிலையில், பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது.

17-வது நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை பிஜேபி பெற்றுள்ள நிலையிலும் பிஜேபி கூட்டணி அரசு அமைக்கிறது. நாடாளுமன்ற பிஜேபியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட மோடியை, புதிய பிரதமராக பதவி ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்ததை அடுத்து அவர் இன்று பதவி ஏற்கிறார்

இதற்கான பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் முன் உள்ள வளாகத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மோடியுடன் மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள். பிஜேபியுடன் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் எனத் தெரிகிறது..

மோடியின் அழைப்பை வங்க தேசத்தின் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் சிறிசேனா, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, மியான்மர் அதிபர் யூ வின் மயின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த முறை மோடி அரசு பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் உள்பட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதால் இடவசதியை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மாளிகை முன்பகுதியில் உள்ள வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பதவி ஏற்பு விழா முடிந்ததும், அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளிக்கிறார்.

பதவி ஏற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் என மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மோடி மற்றும் பிற தலைவர்கள் செல்லும் பாதைகளில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். துப்பாக்கிச்சுடுவதில் நிபுணத்துவம் பெற்ற ஸ்னைப்பர்களும் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதுடெல்லியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.