லண்டன், மே 30:  உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், தொடக்க நிகழ்ச்சி லண்டனில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. ஐசிசி முன்னறிவித்தபடியே, இந்நிகழ்ச்சியில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த கிரிக்கெட் திருவிழாவின் (உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்) துவக்க நிகழ்ச்சி, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே உள்ள லண்டன் மால் எனப்படும் திறந்தவெளிப்பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் (இந்தியா சார்பில் கும்ளே) பங்கேற்றனர்.

60 விநாடி சேலஞ்ச் கிரிக்கெட் என்ற பெயரில் சிறிது நேரம் கிரிக்கெட் போட்டி ஜாலியாக நடைபெற்றது. இதில், முன்னாள் வீரர்கள் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு விளையாடி மகிழ்ந்தனர். இதில், இங்கிலாந்தின் பீட்டர்சன் கூட்டணி சிறப்பாக விளையாடி முதலிடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, உலகக்கோப்பை 2019 தொடரின் அதிகாரப்பூர்வ பாடலான ‘ஸ்டேன்ட் பை’ பாடலை லாரின் மற்றும் ருடிமெண்டல் இசைக்குழுவினர் பாடி நிகழ்ச்சியை இனிதே முடித்தனர். இதனை சுமார் 4,000 ரசிகர்கள் நேரடியாகக் கண்டுகளித்தனர்.

ஆனால், 2019 உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் 10 அணிகளின் வீரர்களுக்கு மட்டும் இவ்விழாவில் கலந்துகொள்ள ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. வீரர்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மாற்றாக வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, 10 அணியை சேர்ந்த கேப்டன்கள் மட்டும் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்து வாழ்த்து பெற்றதுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.