சென்னை, மே 30:  கண் தானம், இரத்த தானம் செய்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு நான்கு விதமான விருதுகளை வழங்கி மத்திய சென்னை அரிமா சங்கம் கவுரவித்துள்ளது.

அரிமா சங்கத்தில் அரும்பணியாற்றிய அதன் முன்னாள் கவர்னர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களது பெயரில் நான்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி அரிமா டாக்டர் சி.வி.அனந்தசயனம் நினைவு விருது கல்வி துறையிலும் சுகாதார துறையிலும் அரும்பணியாற்றிய நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் வழங்கப்படுகிறது.

தற்போது இந்த விருது அம்பத்தூர் ரோட்டரி மருத்துவமனைக்கு அவர்களது சுகாதார மற்றும் கல்வி சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ளது.  அரிமா டாக்டர் பி.சிவராஜ் நினைவு விருது இரத்த தானம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த விருது கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரிக்கும், கவுரிவாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை கல்லூரிக்கும், குரோம்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா சமூக நல அமைப்பிற்கும், வழங்கப்பட்டுள்ளது.

அரிமா இ.எஸ்.கிருஷ்ணன் நினைவு விருது, கண் தானம் செய்யும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும், வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விருது சக்சம் அமைப்பின் பொது செயலாளர் எ.பத்மநாபனுக்கு வழங்கப்பட்டது.

அரிமா டாக்டர் வி.அரவிந்தரெட்டி நினைவு விருது சர்க்கரை நோயாளிகளுக்கு சேவை செய்யும் நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த விருது அரிமா கல்யாணி நாகராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழாவில் அரிமா ஏ.குலாம் உசேன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.