சென்னை, மே 30: சென்னையில் காசிமேடு, திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் புதிதாக கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அடுத்த 6 மாதத்தில் செயல்பட உள்ளது.

ஒவ்வொரு மினி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தும் 1 லட்சம் பேருக்கு குடிநீர் வழங்க முடியும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

சிக்கரயன், கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த குவாரி தண்ணீரும் காலியாகி வருவதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம், சோழாவரம் உள்ளிட்ட 4 ஏரிகளும் நீரின்றி வறண்டு விட்டன. வீராணம் ஏரி தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் விவசாயக் கிணறுகள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு லாரிகளில் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிலத்தடி நீரை பெரிதும் நம்பியுள்ள இடங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் மினி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் முடிவு செய்துள்ளது.  காசிமேடு, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, எம்ஆர்சி நகர், மற்றும் திருவான்மியூரில் அமைக்கப்பட உள்ள இந்த மினி நிலையங்கள் அடுத்த 6 மாதங்களில் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ள இந்த நிலையங்களுக்கு ரூ. 120 கோடி செலவிடப்படும். சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு குழாய் பதிக்கப்பட்டு இப்போது உள்ள குடிநீர் குழாய்கள் வழியாக சப்ளை செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இத்திட்டத்திற்கு மாநில அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்றும் அதை தொடர்ந்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் அனுமதியும் பெறப்படும் என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ வாட்டர் பொறியாளர் ஒருவர் கூறுகையில், ஏற்கனவே மீஞ்சூர் மற்றும் நெமிலியில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை விட இது சிறிய அளவில் இருக்கும். மினி நிலையங்கள் என்பதால் பெரிய அளவில் இடமும் அடிப்படை கட்டமைப்பும் தேவைப்படாது என்றார்.