சென்னை, மே 30: நேரத்திற்கு தகுந்தாற்போன்று மாறும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். பிஜேபி அமைச்சரவையில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்பட உள்ளது.

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் பட்சத்தில், அது குறித்து அரசு முடிவெடுக்கும். நதிநீர் இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறிய கருத்து வரவேற்கத்தக்கது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு சந்தர்ப்பவாதி, நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறி ஆதாயம்தேடுபவர், என்றார். புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, ஜாதி குறித்து கூறிய கருத்து பற்றி கேட்டபோது, ஆண்ஜாதி, பெண்ஜாதி என்ற 2 ஜாதிகள்தான் உள்ளதாக ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.