திருத்தணி, மே 30: அரசு சார்பில் வழங்கி கிடப்பில் போடப்பட்டுள்ள இலவச வீட்டு மனை பட்டாக்களை உரியவர்களிடம் அளந்து ஒப்படைக்க வேண்டும் என்று கூறி திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்.டி.ஓவிடம் மனு அளித்தனர்.

திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் இலவச வீட்டுமனை கேட்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் 80 சலவை தொழிலாளர்களுக்கு திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் ஊராட்சியில் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

ஆனாலும் இதுவரைக்கும் அந்த வீட்டுமனைகள் அடையாளம் கண்டு சர்வே செய்து உரியவர்களிடம் ஒப்படைக் காமல் காலம் தாழ்த்து வதால் உடனடியாக பட்டா வீட்டு மனைகளை அளந்து ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்க தலைவர் நதியாகுப்பன் ராஜ் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.பவணந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மனைகளை வருவாய் துறையினர் அளந்து தராததால் வீடுகள் கட்ட முடியவில்லை. மேலும் தங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் முள் செடி புதர்கள் மண்டி பாறைகளாகவும் உள்ளது. இதை தாங்களே அகற்றிக் கொள்ளவும் வருவாய் துறை அனுமதி தர மறுக்கிறது.

ஆகவே பட்டா வழங்கிய பயனாளியின் பெயர்கிராம கணக்கில் சேர்த்து முறைப்படி அரசு மூலம் வழங்கும் வீடுகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.