சென்னை, மே 30: காலியாக உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை திமுகவிற்கு விட்டுக்கொடுக்க காங்கிரசில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதியில் காங்.தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிட வேண்டும் என முக்கிய தலைவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆலோசித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும் என கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதால் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் எட்டாக இருந்த காங்கிரசின் பலம் 7ஆக குறைந்துள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த கட்சிக்கே ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரசில் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால் திமுக தரப்பில் இடைத்தேர்தல் உடன்பாட்டின் படி தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சட்டமன்றத்தில் கட்சியின் பலத்தை அதிகரிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் சோளிங்கர் மற்றும் ஓசூர் ஆகியவை 2016 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் என்ற போதிலும் திமுகவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.

இப்போது நாங்குநேரி தொகுதியையும் விட்டுக்கொடுக்க கூடாது எனவும் காங்கிரசின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். காங்கிரசின் கொறடாவாக இருந்த பீட்டர் அல்போன்ஸ் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் அந்த தொகுதி திமுகவிற்கு போய்விட்டதால் இப்போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியிலாவது தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருதுவதாக தெரிகிறது.

இதேபோல் ராணிவெங்கடேசன் போன்றவர்களும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. வசந்த குமார் அளித்த பேட்டியில் இந்த தொகுதி காங்கிரசுக்கு உரியது என்றபோதிலும் கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் அவர்களது வெற்றிக்கு பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று பேட்டி அளித்தபோது நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர் இதுகுறித்து ஆலோசித்து கட்சியின் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவை ஏற்போம் என்றார்.