புதுடெல்லி, மே 31: நாட்டின் 16-வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். அவருடன் சேர்த்து 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாகப் பிரதமர் பதவியேற்றுள்ளார். பிரதமரைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

இரவு 7 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், உள்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நிகழ்ச்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பதவியேற்புக்காக ஜனாதிபதி மாளிகையின் வெளிமுற்றத்தில் சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, கட்கரி, ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

சதானந்த கௌடா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணம் எடுத்தனர். முதலில் கேபினட் அமைச்சர்களும், அடுத்து தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும், அதைத் தொடர்ந்து இணையமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சி பதவியேற்பு நிகழ்ச்சி 9 மணியளவில் நிறைவடைந்தது.