புதுடெல்லி, மே 31: டெல்லியில் இன்று காங்கிரஸ் சார்பில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தேர்தலில் பிஜேபி கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. பிஜேபியை எதிர்த்த கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி குறித்தும், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்த இந்த கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இக்கூட்டத்தில் ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் ஆலோசிப்பதாக இருந்தது.

இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்காததால், இன்று மாலை நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின,