புதுடெல்லி, மே 31: 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு திமுக எம்பிக்கள் கனிமொழி, ராஜா ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல், ஒதுக்கீடு செய்ததால், ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு யூக இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஆசிப் பால்வா, வினோத் கோயங்கா, படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி, கலைஞர் டிவி இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

2ஜி வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, வழக்கில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி அதில் தொடர்புடைய அனைவரையும் 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டார். தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் சிபிஐ டெல்லி உயர் நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு அக்டோபர் 24-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

தற்போது வழக்கை விசாரிக்கும் சிபிஐயும், அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.கே.சாவ்லா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் இந்த மனுக்களுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் நீதிபதி ஆணையிட்டார்.