சென்னை, மே 31: எச்.வசந்தகுமார் ராஜினாமாவை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் வசந்த குமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். பிஜேபி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தனபாலை சந்தித்து நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.

சபாநாயகர் ஏற்று கொண்டு நாங்குநேரி தொகுதியை காலியிடமாக அறிவிக்க கோரி மாநில தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடரந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரையை அனுப்பி வைத்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று நாங்குநேரி தொகுதி வெற்றிடமாக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே இன்னும் 6 மாதத்திற்குள் இந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. திமுக இத்தொகுதியில் தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.