சென்னை, மே 31: ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 36). இவரது உறவினர் ரமேஷ். இவர், நேற்று குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் மது அருந்தியுள்ள நிலையில், குணசேகரனின் மகன் அஜீத் புறாவிற்கு தீணி போட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, தவறுதலாக ரமேஷ் மீது தீணிகளை இறைத்துள்ளார், அஜீத். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ், அஜீத்தை கண்டிக்க, இதைபார்த்த குணசேகரன், தனது மகனையே கண்டிக்கிறாயா? என்று கூறி ஆவேசம் அடைந்ததாக தெரிகிறது.

பின்னர், அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து, ரமேஷை தாக்கியுள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த ரமேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்த புகாரின்பேரில், தலைமை செயலக குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனர்.