சென்னை, ஜூன் 1: கொடுங்கையூரில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து 4வயது சிறுமி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்த தம்பதியினர், சத்தியராஜ்-மலர். இவர்களுக்கு, மோனிஷா (வயது 4) என்ற குழந்தை உள்ளது.
இதனிடையே, நேற்றிரவு வீட்டின் மொட்டை (3-வது) மாடிக்கு சென்ற சிறுமி மோனிஷாவை தூக்கிக்கொண்டு காற்றோட்டத்திற்காக சென்றுள்ளார், மலர். அப்போது, மலருக்கு செல்போன் அழைப்பு வரவே போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

பேசிமுடித்துவிட்டு பார்க்கும்போது, அருகில் இருந்த குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. அக்கம்பக்கம் தேடிபார்த்தபோது, குழந்தை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது தெரியவந்தது. இதை பார்த்து பதறிப்போன மலர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு குழந்தை அழைத்துச்செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி மோனிஷா உயிரிழந்துள்ளார்.  இது குறித்து, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.