புதுடெல்லி, ஜூன்,1: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி கூட்டணியின் 2-வது மந்திரிசபை பதவியேற்றவுடன் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 6 ஆயிரமும், சிறு வியாபாரிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மாத ஓய்வூதியம் வழங்க பிரதமர்மோடி முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் 14.5 கோடி விவசாயிகளும், சுமார் 3 கோடி வர்த்தகர்களும் பயன் பெறுவர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி கூட்டணியின் 2-வது மந்திரிசபை மோடியுடன் 24 கேபினட் மந்திரிகளும், 33 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவி ஏற்ற 22 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடி, தனது மந்திரிசபையின் முதல் கூட்டத்தை டெல்லியில்சநேற்று கூட்டினார். இந்த கூட்டத்தில் முதல் முடிவாக, தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ்வரும், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மாற்றி அமைக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

போரில், பயங்கரவாத தாக்குதல்களில் வீர மரணம் அடைகிற படை வீரர்களது குழந்தைகளின் தொழில்நுட்ப படிப்பு மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. போர் வீரர்களின் மகன்களுக்கான கல்வி உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், மகள்களுக்கான கல்வி உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து, ரூ.3 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், இந்த திட்டமானது பயங்கரவாதிகள், மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கொல்லப்படுகிற போலீஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இந்த பிரிவில் 500 குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் இணைந்து செயல்படும். ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் மந்திரி சபையில் முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி விளக்கிய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறும்போது, “”நிலம் உள்ள அனைத்து தகுதியான விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய மந்திரிசபை அனுமதி வழங்கி உள்ளது.

இதன்மூலம் 14.5 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ.87 ஆயிரம் கோடி செலவாகும். பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள மிகப்பெரிய வாக்குறுதியை நிறைவேற்றும் முக்கியமான முடிவாக இது கருதப்படுகிறது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்ட சிறிய வர்த்கர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும என்றார்.