18 லட்சம் பயணிகள் மெட்ரோவுக்கு மாறினர்

சென்னை

சென்னை, ஜூன் 1: எம்ஆர்டிஎஸ் உள்ளிட்ட புறநகர் ரெயில்களில் பயணம் செய்து வந்த 18 லட்சம் பேர் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரெயிலுக்கு மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரையிலான சுரங்க ரெயில் பாதை பிப்ரவரியில் திறக்கப்பட்டதில் இருந்து மெட்ரோ ரெயில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துகிறார்கள். மாதந்தோறும் சராசரியாக 30 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.  தெற்கு ரெயில்வேயின் புள்ளி விவரத்தின்படி ஏப்ரலில் மட்டும் 18 லட்சம் பயணிகள் புறநகர் ரெயிலில் பயணிப்பதை தவிர்த்து மெட்ரோ ரெயிலுக்கு மாறி உள்ளனர். 2018 ஏப்ரலில் புறநகர் ரெயிலில் 32 மில்லியன் பேர் பயணித்து உள்ளனர். இது 2019 ஏப்ரலில் 30.8 மில்லியனாக குறைந்து இருக்கிறது.

இதேபோல் 2018 மார்ச்சில் 34.3 மில்லியனாக இருந்த புறநகர் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை 2019 மார்ச்சில் 32.2 மில்லியனாக குறைந்து இருக்கிறது. வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் இருந்து விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரெயில் பயணம் சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயிலுக்கு இணையாக இருப்பதால் பலர் மெட்ரோவுக்கு மாறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் மெட்ரோ ரெயில் பயணம் புறநகர் ரெயில் பயணத்தை விட எளிதாகவும், படிக்கட்டு பயணத்தை தவிர்ப்பதாகவும் உள்ளது. சென்னை உயர்நீதி மன்றம், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு செல்வோர் மெட்ரோ ரெயிலை அதிக அளவு பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. மேலும் அண்ணாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் ஆட்டோ அல்லது கேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயிலுக்கு வரத்துவங்கியிருக்கிறார்கள்.

பலர் அருகில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு நடந்தே செல்கிறார்கள். புறநகர் ரெயில்களில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட்டில் பயணிப்பவர்களும், மெட்ரோ ரெயிலுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.