சிதம்பரம், ஜூன் 1: கடலூர் மாவட்டம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், பண்ருட்டி, கடலூர் ஆகிய வட்டங்களில் வெள்ளாறு, மணிமுத்தா ஆறு, கெடிலம் ஆறு ஆகிய ஆறுகளின் குறுக்கே ரூ.107.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டும் பணிகளை கலெக்டர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் ஆற்றுநீர் கடலில் வீணாக கலக்காமல் அதனை சேகரித்து விவசாயத்திற்கு பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீரை அதிகப்படுத்திடவும், மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கும் பொதுப்பணித்துறை சார்பில் வெள்ளாறு, மணிமுத்தா ஆறு, கெடிலம்ஆறு ஆகிய ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கீழ்செருவாய் கிராமத்தின் அருகில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.2250 இலட்சம் மதிப்பீட்டிலும், ஸ்ரீ முஷ்ணம் வட்டம் கள்ளிப்பட்டி கிராமத்தின் அருகில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.1700 லட்சம் மதிப்பீட்டிலும், டி.பவழங்குடி மற்றும் புத்தூர் கிராமத்தின் அருகே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.1700 இலட்சம் மதிப்பீட்டிலும், கட்டப்படும் தடுப்பணைகளின் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு இத்தடுப்பணை பணிகளை முழுமையாகவும், விரைந்து முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது விருத்தாச்சலம் சார் ஆட்சியர்.பிரசாந்த் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) மணிமோகன், உதவி செயற்பொறியாளர்கள்சண்முகம், சோழராஜா, பாஸ்கரன், வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.