புதுடெல்லி, ஜூன் 1: பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர், வரும் ஜூன் 17-ஆம் தொடங்கி ஜூலை 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த கூட்டதொடரையொட்டி ஜூலை 5ம்தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மக்களமவையின் புதிய சபாநாயகர் ஜூன் 19-ம் தேதி தேர்வு செய்யப்படுகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்ட பிறகு, முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை எப்போது தொடங்குவது உள்ளிட்டவை தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:-  நாடாளுமன்றம் கூடும் முதல் நாளான 17-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இக்கூட்டத் தொடரில் மத்திய பட்ஜெட், ஜூலை 5-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய நாள், ஜூலை 4-ஆம் தேதி, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மக்களவையின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

மக்களவையின் தலைவர், வரும் 19- ஆம் தேதி தேர்ந் தெடுக்கப்பட வுள்ளார். மக்களவையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும். அதில், பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து உரையாற்றவுள்ளார்.
இவ்வாறு பிரகாஷ் ஜாவடேகர். கூறினார்.