சென்னை,ஜூன் 1: சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை குடிநீரை வழங்குவதில் எந்த வித தடையும் இருக்காது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் மற்றும் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பருவமழை குறைவாக பெய்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. போர்க்கால அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது தினமும் 50 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், வீராணம் நீர், நெய்வேலி நீர்ப்படுகையில் புதிய ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையைப் பொருத்தவரை மழை வராவிட்டாலும் கூட நவம்பர் வரை குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியும். அதேநேரம் பொது மக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறுஅவர் கூறினார். இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிகரன் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.