சென்னை, ஜூன் 2: மத்திய அமைச்சர¢ பதவி குறித்து தேவையற்ற கருத்துக்களை அதிமுகவினர் பதிவிட வேண்டாம் என்றும் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே முக்கியம் என்றும் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்

மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை விட அதிக வாக்குகள் பெற்று வென்றார்.

தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி.யான ப.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராகும் வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின.  இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங் கத்துக்கும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என தகவல்கள் உலாவின.

ஆனால், மத்திய அமைச்சரவை பதவியேற்பின் போது, அதிமுக சார்பில் யாருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இதனால் அதிமுகவுக்குள் விமர்சன கருத்துகள் எழத் தொடங்கின. கட்சிக்குள் திடீரென எழுந்த இந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளைத் தணிக்கும் வகையில், ப.ரவீந்திரநாத்குமார் வேண்டுகோள் செய்தி ஒன்றை கட்சியினருக்கு அனுப்பி வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் மக்கள் பணி செய்வதாகும். அந்த வழியே என் பயணமும் உள்ளது. எனது வெற்றிக்கு அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி. எனக்கு வாக்களித்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே எனது தலையாய கடமை. எதுவாக இருந்தாலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது.

ஆகவே, தேவையற்ற கருத்துகளைப் பதிவிடுவதைத் தவிர்த்து, தங்களது பகுதியில் உள்ள நிறை, குறைகளை தெரியப்படுத்துங்கள் என்று ரவீந்திரநாத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.