பெங்களூரு, ஜூன் 2: மக்களவை தேர்தல் முடிவு வெளியாகி மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்து 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கர்நாடகவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. பிஜேபிக்கு 366 இடங்களும், மஜதவுக்கு 174 இடங்களும் கிடைத்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பிஜேபி 25 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ், மஜத தலா 1 தொகுதிகயை மட்டும் பிடித்து படுதோல்வி அடைந்த நிலையில், இருக்கட்சிகளின் மூத்த தலைவர்களும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி தேதி 20 மாவட்டங்களில் சுமார் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் 1,221 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  இதில் 72 சதவீத மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மொத்தமுள்ள 1,221 வார்டுகளில் காங்கிரஸ் 509 வார்டுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிஜேபி 366 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனித்து போட்டியிட்ட மஜத 174 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3, மா.கம்யூ கட்சி 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 160 வார்டுகளிலும் பிற கட்சிகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.